சிவப்ரியன்

மழைக்காலம் - 3

4

| Posted in | Posted on 5:34 PM

விடியல்.

வெட்கப்பட்ட பூமியின்
உடலெங்கும்,
மொத்தமாய் முத்தத்தால்,
நனைத்துச் சென்றிருந்தது.
பெரு மோகம் கொண்ட
பின்னிரவு வானம்.!
.

மழைக்காலம் -2

2

| Posted in | Posted on 11:19 PM

விடுமுறை இரவு,
விடியும்வரை மழை.
அணைக்க முடியவில்லை,
அலைபேசியில் அவள்..!
.

மழைக்காலம்.

3

| Posted in | Posted on 12:39 PM

மனைவியை மறுபடியும்
காதலியாய் மாற்றியிருக்கிறது
பொல்லாத இந்த
மழைக்காலம்.!
.

கவிதைப் பட்டறை.

0

| Posted in | Posted on 1:19 PM

தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர்.
மற்றும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
இணைந்து நடத்தும்
POETRY WORKSHOP
கவிதைப் பட்டறை


நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).


இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com இணையதளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.


மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பேனா விலைபோகலை.

11

| Posted in | Posted on 5:07 PM

பெண்ணியவாத தோழி ஒருத்தி
கவிதை ஒன்று வரைந்தாள்.

விந்து, யோனி, புணர்ச்சி
எந்த வார்த்தைகளுமில்லை.

பெரிய தலைவனின்
"குறி"ப்புகளில்லை.

கடவுள் எவனும்
உடைபடவில்லை.

ஆடவரை இழிவுசெய்யும்,
மடமையுமில்லை.

உச்சகட்ட போதையின்
உளறல்கூட இல்லை.

ஏற்க முடியவில்லை.
நவீன பெண்ணியக் கவிதை.

கருத்தாழத்தோடு இருக்கிறதாம்,
முகம் சுளிக்காமல் படிக்கலாமாம். - என
என்னென்னவோ சொன்னாள்.

ஆனால்,
நவீன பெண்ணியத்தில்,
பாவம் என் தோழியின்,

"பேனா விலைபோகலை".

.

ஏப்ரல் 14

4

| Posted in | Posted on 8:20 AM


விரோதி,
விக்ருதி,
அம்மாவாச,
வருசப் பொறப்பு,
சித்திர ஒன்னு.
எதோ ஒன்னு,
ஆத்தா படியளப்பா..
இன்னிக்கு கோயில்ல
பொங்கச் சோறு!
.

சென்னை பதிவர்கள் சந்திப்பு - 10 ஏப்ரல் 2010.

6

| Posted in | Posted on 12:19 AM


சென்னை பதிவர்கள் சந்திப்பு - 10 ஏப்ரல் 2010.  


என்னிடம் வித்தியாசமான ஒரு கெட்ட பழக்கம் உண்டு. இத்தனை மணிக்கு வரவேண்டுமென்றால் 20 - 30 நிமிடத்திற்கு முன்பே அங்கே சென்றுவிடுவேன். அப்படியே ஆனது சென்ற சனிக்கிழமை மாலை,
ஆம், மெரீனா கடற்கரைச் சாலை...
பா.ஜ.க வின் கொடிகளைத் தாங்கி நிறைய வண்டிகள்..ஏதேனும் பொதுக்கூட்டமா அல்லது வாரக்கடைசி என்பதாலா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. சென்னையின் கீழ்த்தட்டு மற்றும்  நடுத்தர மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு... அல்லது உக்கிரத்தைத் தணிக்கும் இடமாக... (அட வெய்யில சொல்றேங்க.) இருக்கிறது ஆசியாவின் நீண்ட கடற்க்கரை.

காந்தி சிலை.
மாலை வெய்யிலால் கறுப்பு காந்தி பொன்னிறமாய் மாறிக்கொண்டிருந்தார். ஆனால் அண்ணன் தண்டோரா பளிச்சென்று தெரிந்தார் (சட்டை நிறம்) கூடவே சிவராமன் மற்றும் சிலர்.
ஒருவழியாய் 6 மணியளவில் டோண்டு மற்றும் பாலபாரதி அவர்களின் வருகையால் ஒரு முடிவுக்கு வந்து, இடம் தேடி..ஒரு காதல் ஜோடிகள் ஆக்கிரமித்த தைரியத்தில்,புல்வெளியில் வட்டமிட்டு அமர்ந்தோம்.
நம் சுய அறிமுகத்துடன் ஆரம்பமானது சந்த்திப்பு.
விக்கிப்பீடியாவில் தமிழ் பதிவர்களின் பங்களிப்பு, அதன் அவசியம், நிறை குறைகள்..
தமிழ் காமிக்ஸ்..
எங்கே பிராமணனின் விமர்சனம்..
என நிறைய விவாதித்தாலும், பதிவுலகம் பயமுறுத்தியவாறு இல்லாமல் இனிதே நடந்தது. (இதில் நான், காமேஷ் இருவர் மட்டுமே கன்னிசாமி. ஆமாமா மற்ற எல்லோருமே குருசாமிகள்.)
சாமியேயேயேய் .......
இடையில் புல்வெளியில் அமரக்கூடாது என சில காவலர்கள், கனிவும், கண்டிப்புடனும் கூறியதில், இடம் மாற்றப்பட்டு, சிறு சிறு குழுவாக பிரிய நேர்ந்து.. தொடர்ந்தது.
கேபிள், ஜாக்கி சேகர் போன்றோர் சினிமா கிளைமாக்சில் வரும் போலீஸ் மாதிரி கடைசியில் தரிசனம் தந்தார்கள். நான் கேபிளின் பைக்கிலேயே தொற்றிக்கொண்டு முடிவுரைக்கு (டீக்கடைதான் வேறென்ன) வந்தேன். அப்போதும் நிறைய கிளைமாக்ஸ் போலீஸ் வந்ததால் அவர்களின் பரிச்சயம் தவிர்க்கப்பட்டது உண்மை.
கடைசியில் சுபம்... சுபம்.. சுபம்.  

கிளிக்கிய சில..,












(என் கேமரா பாட்டரி தனது சக்தியை இழந்ததில், நிறைய பேர் மிஸ்ஸிங்..) :-(
.

ஹைக்கூ - 7

0

| Posted in | Posted on 11:41 AM

காருண்யம்

புகைப்பது தவறென்றான்
மாமிசம் உண்பவன்
இலை சைவம் தானே!
.

ஹைக்கூ - 6

0

| Posted in | Posted on 11:41 AM

போதனை

வாத்தியாரால்,
நாத்திகனானான்.
அப்துல்லா!
.

ஹைக்கூ - 5

0

| Posted in | Posted on 1:04 AM

காலை தியானத்தால்
கரைந்தே போனது
இலை மீது பனி!
.

அவன் யார்?

2

| Posted in | Posted on 12:56 AM

உறவுகளற்றவன் -ஆனால்
அனாதையில்லை.

அரசியல் பேசுவான்  -ஆனால்
வாக்காளனில்லை.

எல்லாம் தெரிந்தவன் -ஆனால்
ஞானியில்லை.

மதுவிலக்கு பேசுவான் -ஆனால்
மதுவின்றி உறங்காதவன்.

கலாச்சாரம் கூட சொல்வான் -ஆனால்
சாரமற்றவன்.

கிரிக்கெட்டும், சினிமாவும்
சமூகமென்பான்.

குடும்பம்,காதல்,நட்பு -எல்லாம்
வியாபாரமாய்ப் பார்ப்பவன்.

அவன் யார்?
அவன் யார்?

அவன் யாரென,
தேடுபொறியை முடுக்குகிறாயா?
என் அருமை
கணிப்பொறி வல்லுனனே!
.

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும் - ஒரு பகிர்வு

4

| Posted in | Posted on 6:30 PM

டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
ஆசிரியர் : பரிசல் கிருஷ்ணா
பதிப்பு : நாகரத்னா பதிப்பகம்
விலை : ரூ 50௦/-
கிடைக்குமிடம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6.முனுசாமி சாலை, முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்,
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர், சென்னை –78

ஆன்லைனில் வாங்க,
மேலதிக விபரங்களுக்கு, 
http://www.parisalkaaran.com  / kbkk007@gmail.com



டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்.
17 கதைகளடக்கிய சிறுகதைத் தொகுப்பு. அறிமுகஉரை எழுதிய நண்பர் சுரேகா குறிப்பிட்டிருந்ததைப்போல, இவர் இப்பிடித்தான் எழுதுவார் என்று கணிக்க முடியாதபடி எல்லாப் பாணியிலும் எழுதியிருக்கிறார்.
எளிய நடையில், சுவாரஸ்யமாக, (ஜனரஞ்சகமாக.. அப்பிடின்னு சொல்லுவாங்களே..) இருப்பது மிக அருமை. 


வாழ்த்துக்கள் பரிசல். 


1. தனிமை-கொலை-தற்கொலை.
சுவாரஸ்யமான கதை. முடித்திருக்கும் விதம் அழகு!
நட்பு,காதல்,துரோகம்,பரிதாபம்,கோபம்,கொஞ்சம் வர்ணனை என கலந்துகட்டி நட்பு பாராட்டியிருக்கிறார்.

2. காதல் அழிவதில்லை.
இளமையிலே காதல் வரும்; எது வரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.... - என்ற கண்ணதாசன் வரிகளை கதையாக்கியிருக்கிறார் மிகவும் ரசிக்கும்படி.!
(காதலிப்பவனுக்கு நண்பனாயிருப்பதன் கொடுமைகளை நானும் அனுபவித்திருக்கிறேன்.)

3. காதலிக்கும் ஆசையில்லை.
பீச்சில் நண்பனோடு ஆரம்பித்து, ரயில்வே ஸ்டேஷனில் நண்பி என முடிகிறது. இடையில் எதோ நட்பு,காதல்,தோழி, காதலி,தோழியின் தோழி என்றெல்லாம் வருகிறது. அட போங்க சார்.

4. Butterfly Effect.
அழகான, ரசனையான ஹைக்கூ மாதிரி... சூப்பர்!
படித்து அனுபவிப்பதே சாலச்சிறந்தது.

5. இருளின் நிறம்.
செண்டிமெண்ட். இன்னும் கொஞ்சம் விவரித்திருந்தால் நன்றாய் புரிய வாய்ப்பிருக்கிறது.

6. நான் அவன் இல்லை.
சுவாரஸ்யமான கிரைம் கதை. இதை படிக்கும்போது உங்களுக்கு சுஜாதா ஞாபகம் வந்தால் கதையின் தலைப்பை படிக்கலாம்.

7. மாற்றம்.
கட்டிங் பிளாஷ்பேக். (இது வேற கட்டிங்..)
ஆனாலும் அதே ஈரிழைத்துண்டோடவா...? நல்லா "உக்காந்து யோசிச்சிருக்கலாம்".

8. மனிதாபிமானம்.
என்னமோ சொல்ல வர்றாருபோல என நினைத்து அடுத்த பக்கத்தைப் புரட்டினால்...,
அட போங்க பாஸு, கதை முந்தின பக்கத்துலையே முடிஞ்சிருச்சுன்னு கலாய்க்கிறாரு.

9. நட்பில் ஏனிந்த பொய்கள்?
காலேஜ் பிரண்டுக்கு எழுதின லெட்டர, மறந்துபோய் உள்ள வெச்சிருந்திருக்காரு, தவறுதலா அதுவும் சேர்ந்து பிரிண்ட் ஆயிடுச்சு. வேற ஒண்ணுமில்ல.

10. கைதி.
நான் அவன் இல்லை - 2

11. ஜெனிஃபர்.
படு சுவாரஸ்யமான காதல் கதை. முடிவில் நெகிழ வைக்கிறார். நிறைய ரசித்தேன். இந்தக்கதைக்கு சிறப்பு பரிசு தரலாம்.

12. கடைசி ஓவரில் ஒரு ஆபரேஷன்.
ஒரு நேரடி வர்ணனையில் லயிக்க வைத்து ஷாக் குடுக்கிறார்.

13. டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்.
பாக்கெட் நாவல் படித்த உணர்வு. இருவேறு சம்பவங்கள் மாறி, மாறி வருகிறது. கடைசியில் ஒன்றாய் முடிச்சுப் போட்டிருக்கிறார். அருமை.

14. மனசுக்குள் மரணம்.
படித்தால் பிடிக்கும்.

15. ஸ்டார் நம்பர் ஒன்.
வாழ்க்கைச்சக்கர தத்துவம். கமர்சியல் பூசி.

16. நட்சத்திரம்.
ஏற்றத்தாழ்வு கொண்ட சமுதாயத்தின் எதார்த்தப் பதிவு.

17. சமூகக்கடமை
சமூக அக்கறைபற்றி பேசுகிற சுயநலவாதி. கதையல்ல நிஜம்.


இணைய பயனாளிகள் / பதிவர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அதிக வாசகர்களை சென்றடையும் வகையில் புத்தகமாய் அச்சில் கொண்டுவந்த பரிசலுக்கும், பதிப்பகத்தாருக்கும், உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


புத்தகத்தை வாங்கி படியுங்கள், அனுபவியுங்கள், அன்பளியுங்கள்.  





இப்ப நம்ம.....(அது இல்ல...  கேள்வி நேரம்),

  1. ஏதாவது கதையின் தலைப்பு தான், புத்தகத்தின் பெயராகவும் இருக்கவேண்டும் என்று ஏதாவது வரையறை உண்டா?
  2. யார் குடுத்த ஐடியா இது?
  3. இந்த படைப்புக்காக, பல பதிவுலக நண்பர்கள் சேர்ந்து உங்களுக்கு, "நவரச கதைஞர்" என்ற பட்டத்தை வழங்கப்போவதாக நண்பர் வெள்ளிநிலா ஒரு குறுந்தகவல் அனுப்பினாரே... அது உண்மையா? 



லெமன் ட்ரீயும்,இரண்டு ஷாட் டக்கீலாவும் -ஒரு பகிர்வு

7

| Posted in | Posted on 12:11 PM

நான் பொதுவாய் நிறைய புத்தகங்கள் வாங்குவதுண்டு!
சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய உடனேயே படித்துவிடுவேன்.
பல புத்தகங்கள் வாசிக்கப்படாமலேயே தூங்கிக்கொண்டிருக்கும்.
இன்றாவது படித்துவிட வேண்டும் என தினமும் நினைத்தாலும் கூட, சில மாதங்களுக்குப் பின்பே அந்த வாய்ப்பு கிட்டும்.

ஆனால் எனது பாட்டி (செஞ்சுரி அடிக்கப்போகிற வயசு)
இன்றும் நிறைய படிப்பார்.
நான் வாங்கி கிடப்பில் போட்டிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் அவர்தான் முதலில் படிப்பார். (சில புத்தகங்கள் விதிவிலக்கு)

எதற்கு இந்த நீண்ட முன்னுரை என்றால்,
சென்ற வாரம் வாங்கிய கேபிள் சங்கரின்  புத்தகத் தலைப்பிற்கு,
என்னை மொழிபெயர்ப்பாளன் ஆக்கிய "கொடுமை" அவரையே சேரும்.

பாட்டி : என்ன பேரு இது? "லெமன் ப்ரீயும், இரண்டு ஷாப் பக்கீலாவும்?"

நான் : அது "ப" இல்ல "ட". "லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்".

பாட்டி : சரி அப்பிடீன்னா?

நான் : ம்ம்ம்ம்...... "எலுமிச்சை மரமும், இரண்டு கோப்பை மதுவும்" .

(என்ன கொடுமை சார் இது?)

(என்ன நினைத்தாரோ இதுவரை அந்த புத்தகத்தை தொடக்கூட இல்லை. ஒருவேளை "ஸீரோ டிகிரி" பாதிப்பாய்க்கூட இருக்கலாம்.)

ஒருவேளை இது சினிமா தலைப்பாக இருக்கும் பட்சத்தில், (இப்போ வேண்டாம்; இந்த விசயத்துக்கு கடைசியில் வருவோம்.)

லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
ஆசிரியர் : சங்கர் நாராயண்
பதிப்பு : நாகரத்னா பதிப்பகம்
விலை : ரூ 50௦/-
கிடைக்குமிடம் :  டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை, முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில், மேற்கு கே.கே.நகர், சென்னை –78
மேலதிக விபரங்களுக்கு,
கேபிள் சங்கர் : 9840332666
http://cablesankar.blogspot.com/


 
முதல் கதையிலேயே பிரமித்துப்போய், அதே உற்சாகத்தோடு, ஒரே மூச்சில் முழுவதும் படித்து முடித்த பின்பே கீழே வைத்தேன்.

சுவாரஸ்யமான, விறுவிறுப்பான, தேர்ந்த எழுத்து நடை. வாழ்த்துக்கள் சங்கர்ஜி.

புத்தகத்தை நிறைய பேர் துவச்சு, பிழிஞ்சு, கடைசியில் இஸ்திரி வேறு போட்டு விட்டதால், புதிதாய் நான் சொல்வதற்கு....,

எங்கே ஆரம்பித்து, எங்கே முடிக்க வேண்டும் என்கிற சூட்சமம் தெரிந்து வைத்திருக்கின்றார். கதையை நகர்த்தும் விதமும், வார்த்தைகளைக் கையாண்ட விதமும் அழகு.


எனக்குப்பிடித்த கதைகள்,
1. முத்தம்.
2. ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ்.
3. ராமி, சம்பத், துப்பாக்கி.
4. போஸ்டர்.
5. லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
6. தரிசனம்.
7. காமம் கொல்.


1. முத்தம்.
எனக்கு மிகவும் பிடித்த கதை. 
ஒரு வித பதட்டத்துடனே கதையோடு பயணிக்க வேண்டியிருந்தது. கதாபாத்திரங்களையும் அதன் உணர்வுகளையும் அழகாய் செதுக்கியிருக்கிறார்.    
கதை நகரும் விதமும், முடிவும் மிக அருமை.

2. லெமன் ட்ரீயும், இரண்டு ஷாட் டக்கீலாவும்
வாழ்க்கைத்தத்துவம்.  
ஓஷோவின் "இதுவும் உன்னைக் கடந்துவிடும்" டைப். ஆனால் இவருக்கே உண்டான பாணியில் பயணிக்கிறது. 
(நகரத்து ஆண்கள் / இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு புரியும். ஆனால், மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் கிராமத்து தமிழாசிரியருக்கோ, சாதாரண வாசகிக்கோ புரிவது மாதிரி எனக்கு தெரியவில்லை.) 

3.கல்யாணம்
காமக்கதை முதல் பகுதி. (பதின் வயதிலிருக்கும் ஆண்கள் ரசிக்க வாய்ப்பிருக்கிறது.) 

4. ஆண்டாள்
கடைசியில் வழக்கம்போல ட்விஸ்ட் வைக்க நினைத்து, எங்கோ சறுக்கியதாக தெரிகிறது. மனதில் ஒட்டவில்லை.    

5. ஒரு காதல் கதை.. இரண்டு கிளைமாக்ஸ்.
இரண்டு முடிவுகளும் எதிர்பாராதது. அதிலும் முதல் கிளைமாக்ஸ் நெகிழ வைக்கிறது. சூப்பர்.!

6. தரிசனம்.
ஆன்மீக அனுபவம், வேறு கோணத்தில். 
நீங்கள் படிக்கும் இடம், வயது, உங்கள் சூழ்நிலையைப் பொருத்து உங்கள் எண்ணம் வேறுபட வாய்ப்பிருக்கிறது. 

7. போஸ்டர்.
இரண்டு வெவ்வேறு இடங்களில் அந்தந்த இடத்துக்குண்டான சம்பவங்களை விவரிக்கிறார்.அனால் கிளைமாக்ஸ் சஸ்பென்சை வேறு ஒரு இடத்தில் இருவர் பேசிக்கொள்கிறார்கள் .  (கிட்டத்தட்ட ராஜேஷ்குமார் நாவல் மாதிரி உணர்கிறேன்.)      

8. துரை..நான்..ரமேஷ் சார்.
ஒரு நடிகையின் கதை அல்ல. பல பெண் ஜூனியர் ஆர்டிஸ்டுகளின் கதை. பொதுவான கோடம்பாக்க கதை. 

9. என்னை பிடிக்கலையா?
காமக்கதை இரண்டாம் பகுதி. (பிட்டுப் பட ப்ளாஷ் பேக் கதை.)

10. காமம் கொல்.
தாம்பரத்துக்குப் பக்கத்தில் நடந்ததாக எப்போதோ நக்கீரனில் படித்த ஞாபகம்.ஆனால் மிகவும் ரசிக்கும் படியாக இனிப்பு தடவி தந்திருப்பது மிக அருமை.   

11. ராமி, சம்பத், துப்பாக்கி.
யூகிக்க முடியாத திருப்பம். (டுஸ்யாங்... , டுமீல்... - படித்து அனுபவிக்க வேண்டிய இடம்.)        
பேசிக்கொள்ளும் வார்த்தைகளைக்கூட எண்ணி எண்ணி சேர்த்திருக்கிறார்.

12. மாம்பழ வாசனை
குடைக்குள் மழை மாதிரி எதோ நடப்பதாய்த் தெரிகிறது; கடைசியில் டாக்டர் ருத்ரனும் விளக்கமளிக்காததால்... :-(
ஒருவேளை எனக்கு புரிந்து கொள்கிற பக்குவம் இல்லாமல் கூட இருக்கலாம்.
  
13. நண்டு
எதார்த்தம். எதோ மிஸ்ஸிங். 


மேலே இருப்பவை மட்டும் படிக்காமல், புத்தகத்தையும் வாங்கி (ஓசியில் அல்ல)
எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.  

இணைய பயனாளிகள் / பதிவர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அதிக வாசகர்களை சென்றடையும் வகையில் புத்தகமாய் அச்சில் கொண்டுவந்த கேபிளாருக்கும், பதிப்பகத்தாருக்கும், உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


இப்ப நம்ம மொக்கை,


ஒருவேளை இது சினிமா தலைப்பாய்  இருக்கும் பட்சத்தில்...
அல்லது செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு..
(உக்காந்து யோசிச்சது தான்...)


கே.மு.க.ம. கட்சித் தொண்டர்கள் தலைப்பை மாற்றச் சொல்லி போராட்டம் நடத்தலாம்.

கலாச்சாரத்தை சீரழிக்கும் நோக்கில் பெயர் வைத்திருப்பதாக படைப்புகளுக்கு தடை வரலாம்.

தமிழ்நாட்டில் புத்தகம் வெளியிடுவோர், கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும் என உத்தரவு வரலாம்.

அல்லது தமிழில் பெயர் வைப்போரின் புத்தகங்களுக்கு வரி விலக்கு / இன்ன பிற சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

......... இயக்கத்தின் சார்பில் ஆட்டோ வரலாம்.

போ.க.ம மகளிர் அமைப்புகள் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடாது என உண்ணாவிரதம் இருக்கலாம்.

எலுமிச்சை மரமும், ....  -என  பெயர் மாற்றம் செய்யப்படலாம்.

புதிதாய் கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்பு கூட வரலாம்.

சரி கேபிளுக்கு தமிழில் என்ன பேரு? (சும்மா லுல்லுல்லுலாயிக்கு!)

காதலர்தின ஸ்பெஷல் ஹைக்கூ

3

| Posted in , | Posted on 4:58 PM

காதலர்தின ஸ்பெஷல் ஹைக்கூ 
"இச்" 


நன்றி : யூத்புல் விகடன் - காதல் ஸ்பெஷல்.
(இது யூத்புல் விகடனில் வெளியான எனது படைப்பு. காதலர் தின ஸ்பெஷல்)

ஹைக்கூ - 3

4

| Posted in , | Posted on 1:19 AM

மொழி

தேவதை பேச ஆரம்பித்துவிட்டாள்
தயாரானான் மொழிபெயர்ப்பாளன்
மழலையின் தந்தை!

*

கனவு

உறங்கிய பின்பும் விடவில்லை
கட்டிப்பிடித்த கரடி பொம்மை
கனவில் பூச்சாண்டி!

*

எழுத்து,
வார்த்தை,
வாக்கியம்.

நீ,
நான்,
நம் காதல்!

*
நன்றி : யூத்புல் விகடன்

(இது யூத்புல் விகடனில் வெளியான எனது படைப்பு.)

வட்டிக்கடை

0

| Posted in | Posted on 2:03 AM

எட்டாம் வகுப்பில் படிப்பு ஏறல,
அம்மா அதட்டினாள்,
ஒழுங்காய்ப் படி. இல்லேன்னா,
வட்டிக்கடை தான்.

பத்தாம் வகுப்பில் தோல்வி
பக்கத்து வீட்டு மாமாவின்,
கரிசன ஆலோசனை
வட்டிக்கடை.

படித்தவன் பிதற்றினான்,
பாவம் சேர்க்கும் இடங்களில் ஒன்று,
வட்டிக்கடை.

உறுதியாய் மறுத்தேன்
வேண்டாம் - இந்த
வட்டிக்கடை.

வறுமையில் உழைத்தவன்,
கால்வயிறு உணவையும்,
பிடுங்கித் தின்றது
வட்டிக்கடை.

மரணப் படுக்கையிலும், 
தூற்றினாள் ஊர்க்கிழவி
வட்டிக்கடை.

இந்த வருடம் எனக்குக் "கூட்டு"
என்ற நண்பனை,
பாவியென உமிழ்ந்தேன்
காரணம்,
வட்டிக்கடை.

ஆனால்,
கல்லூரிப் படிப்பிற்கென,
அப்பா ஏறி இறங்கினார் நிறைய
வட்டிக்கடை.

வேலை தேடுகையில்,
அன்னையின் தாலியையும்
அபகரித்ததுப் போனது,
வட்டிக்கடை.

மரியாதை நிமித்தம்,
ஊரையும் காலி செய்தோம்
காரணம்,
வட்டிக்கடை.

உடைந்துருகிய தருணத்தில்,
கிடைத்தது, வேலைக்கான கடிதம்.

"வங்கி அதிகாரி,
கடன் வழங்கும் பிரிவு."

இறுதியாய் மறுக்கவில்லை,
வேண்டாம் என - இந்த
வட்டிக்கடை.

பொங்கல் திருநாள் - வரலாற்றுச் சுவடு!

2

| Posted on 7:09 PM

எனது சிறுவயது பொங்கல் திருநாள் மிகவும் சுவாரஸ்யமானது. கொண்டாட்டங்கள் நிறைந்தது.

வீதியெங்கும் புதிதாய் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள், கரும்புக் கட்டுகளின் குவியல்கள், வர்ணம்தீட்டப்பட்ட புதுப் பானைகளை விற்கும் கடைகள் என, அந்த கிராமத்தில் ஓரிரு வாரங்களுக்கு முன்பே பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டத்தொடங்கிவிடும்.

"பொங்கல் வாழ்த்து" அட்டைகள் அந்நாளில் மிகவும் பிரபலமான ஒன்று.

பொங்கல் வாழ்த்து, உழவர் திருநாள், தமிழர் திருநாள், பொங்கலோ பொங்கல் என்ற வாசகங்களைத் தாங்கி, பல வண்ணப்படங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

உழவன், ஏர், மாட்டு வண்டி ஓட்டி வரும் விவசாயி, பொங்கல் பானை சுற்றி கரும்புகள், குடும்பத்துடன் சூரிய வணக்கம் போன்ற படங்கள் அச்சிடப்பட்ட அட்டைகளுக்கு நல்ல வரவேற்ப்பு.

பிறிதொரு சமயத்தில் சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள் இந்த படங்களையும் தாண்டி வசூலில் (?) சாதனை படைத்தது.

ஆனாலும் வாழ்த்து அட்டைகள் பரிமாறிக்கொள்வது மகிழ்ச்சியான ஒன்றே.!

பொங்கல் திருவிழா மொத்தம் மூன்று நாட்கள். முதல் நாள் போகி, இரண்டாம் நாள் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்.
(நான்காம் நாளான காணும் பொங்கலை ஏனோ இவர்கள் கண்டுகொள்வதில்லை.)

அந்த ஊரின் ஒரு நற்பணி மன்றம், இந்த விழா நிகழ்ச்சிகளை எல்லாம் பொறுப்பேற்று (ஊர் முழுவதும் மைக் செட், தோரணம் என) தடபுடலாய் நடத்திக்கொண்டிருக்கும்.

 
போகி

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கேற்ப, வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை தீயிட்டு கொளுத்துவார்கள்.

இன்று தான் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும். பலவித விளையாட்டுக்கள் உண்டென்றாலும், முதன்மையாய் இருப்பது "கபடி". அந்த பெரிய கிராமத்தைச சுற்றி உள்ள பல்வேறு சிறிய கிராமத்திலிருந்து பல அணிகள் கலந்து கொள்வார்கள்.

ஆட்டக்காரர்கள் மூச்சு விடாமல் "கபடிக் கபடி" என்று பாடிக்கொண்டிருப்பார்கள், சிலர் புதிது புதிதாய் வார்த்தைகள் சேர்த்துப் பாடிக்கொண்டிருப்பர்கள். முறுக்கிய மீசைகளும், திமிறிய தோள்களும் பாடுவதை அங்குதான் பார்க்க முடியும்.

கைதட்டல், விசில் என காதுகள் கிழிய பார்வையாளர்கள் இவர்களை உற்ச்சாகப் படுத்தி ஆரவாரம் செய்வார்கள். அங்கே ஒரு இளம் தமிழாசிரியர், "இந்த கபாடி போட்டியை நடாத்திக்கொண்டிருக்கின்ற" என்று ஒரு மாதிரியான தமிழில் நேரடி வர்ணனை செய்துகொண்டிருப்பார். அவருடைய வர்ணனையை கேட்ப்பதற்க்காகவே, பள்ளித் தோழர்களுடன் அங்கே செல்வதுண்டு.

அந்த நண்பகலில், அளவிற்கு அதிகமாய்க் கூட்டம், ஒரே கைதட்டல், பெருஞ்சத்தம், நிறைய தள்ளு முள்ளுகள், இவர்கள் ஏன் மைதானத்தை விட்டு சற்று தள்ளி விளையாடுகிறார்கள்? என்று எனக்குச் சந்தேகம். பிறகே விளங்கியது அந்த விளையாட்டு விபரீதமாகி, சில ஊர்க்காரர்கள் "மோதிக்" கொள்கிறார்கள் என்று.

ஒருவழியாய் அவர்கள் சமாதானமானபோது, நான் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன்.

பொங்கல்

தை மாதம் முதல் நாள். அதி காலையில் எழுந்து, புத்தாடை உடுத்தி, கரும்புகளுக்காக காத்திருக்கும் நேரம்.. சாமி கும்பிடாம சாப்பிடக்கூடாது என்ற அதட்டலுக்குப் பயந்து போய், வெளித் திண்ணையில் உட்கார்ந்து, படையலுக்கான ஏற்பாடுகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். சூரியன் தான் எல்லா உயிரினத்துக்கும் ஆதாரம், அதனால் தான் முதலில் சூரிய வணக்கம் - என்றெல்லாம் பாட்டி கதை சொல்லிக்கொண்டிருப்பாள். ஆனாலும் கவனம் வெட்டப்படும் கரும்பின் மீதே இருக்கும்.

சரி வாங்க சாமி கும்பிடலாம். என்ற அழைப்பு கேட்டதும், ஓடிப் போய் முதல் ஆளாய் நிற்ப்பேன். அப்போதே பக்கத்து வீடுகளில், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல் என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துவிடும்.

கோலப்போட்டி, சைக்கிள் ஸ்லோ ரேஸ், சாக்குப் பந்தயம், மியூசிக் சேர், ஊசியில் நூல் கோர்ப்பது, கயிறு இழுத்தல் என அன்றைய நிகழ்ச்சிகளின் பட்டியல் நீளும். அந்த ஊரின் கே.எஸ்.ராஜா, தனது கர்ண கொடூரமான குரலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக்கொண்டிருப்பார்.

(கே.எஸ்.ராஜா - எண்பதுகளில் மிகப்பிரபலமாக இருந்த / இன்றும் மறக்கமுடியாத வானொலி அறிவிப்பாளர்.)

மாலையில் பஞ்சாயத்தோடு ஒரு பரிசளிப்பு விழா.

மாட்டுப்பொங்கல்

மாட்டுப் பொங்கலின் அடையாளமே மஞ்சு விரட்டுதான். (ஜல்லிக்கட்டு)

வித விதமான வடிவங்களில், பல வண்ணங்களில், கொம்புகளோடு காளைகள்.அதன் வேகம், கம்பீரம், பயிற்சி, ஆபரணங்கள்.. (பாக்கறதுக்கே கொஞ்சம் டெர்ரர்ரா இருக்கும்.) அந்த மாடுகளை பிடிக்க வருகிறவர்கள் அதைவிட பயமுறுத்துவார்கள்.

பார்க்கப் போவதற்க்கே வீட்டில் நிறைய கெடுபிடி. சின்னப் பசங்க அங்கே எல்லாம் போகக் கூடாது - என்ற கண்டிப்பையும் மீறி, நண்பர்களின் உதவியால் கபடி மைதானத்தை அடைந்த போது, (கபடி மைதானத்தை கடந்து தான் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.) அங்கே ஜல்லிக்கட்டு வீரர்கள் மும்முரமாய் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

(அப்போதைய அரசு, மலிவு விலையில், ஒரு அதிநவீன முறையில், பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கியது மதுவை.)

அவர்கள் உரக்கப் பேசிக்கொள்வது, சண்டையிடுவது. சாராய நெடி என அந்த இடமே ஒருவித திகிலான அனுபவத்தைத் தந்ததால் பயந்து போய் வீடு திரும்பினோம்.

ஆனால், அந்த ஊரின் படித்த இளைஞர்கள், இதெல்லாம் காட்டுமிராண்டித்தனம் என்று, முந்தைய நாள் வெளியான திரைப்படத்திற்குச்சென்று விடுவார்கள். கல்வி அவர்களுக்கு வேறு விதமான கம்பீரத்தைக் கொடுத்திருந்தது! (அந்த கிராமத்திலிருந்து 22 கி.மீ செல்ல வேண்டும் திரைப்படம் பார்க்க)

நெருங்கிய குடும்ப நண்பர் வீட்டிலிருந்து மாட்டுப் பொங்கலுக்கான அழைப்பு. அவர்கள் வழக்கில் "பட்டிப் பொங்கல்". அன்றிலிருந்து பல வருடங்கள் அவரது தோட்டத்தில்தான் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டம். மாடுகளைக் குளிப்பாட்டி, பொட்டு வைத்து.. (நான் வேடிக்கை பார்ப்பதோடு சரி)

(விவசாயப் பின்னணியைக் கொண்டவர்களுக்கு அதிகம் அனுபவம் இருக்கும்.)

பின்னாளில்,

பள்ளிச் சீருடையே, பொங்கல் புத்தாடையாய் ஆனதற்காக, பிணங்கிக்கொண்டது ஒரு பொங்கல்...

சைக்கிள் கற்றுக்கொண்ட பின்பு, வீதி முழுவதும் கோலங்களை அழிப்பதே தொழிலாய் ஒரு பொங்கல்...

புதிதாய் மீசை வந்ததும், நண்பர்களோடு அலங்காநல்லூரில் ஒரு பொங்கல்... (வேடிக்கை பார்க்கத்தான்.)  

அவளுக்கான காத்திருப்பில் அழகானதாய் ஒரு பொங்கல்...

வேலை தேடிய வெளிமாநிலத்தில் சங்கராந்தி என ஆரம்பித்து, ஊருக்குப்  பயணமானது..  ஒரு பொங்கல்...

மேன்சன் காலங்களில், மாமி மெஸ்ஸில்.. தினமும் காலை வடையோடு, - ஒரு பொங்கல்...   (என்ன கொடுமை சார்)

இன்று,

இன்றைய பொங்கல் அத்தனை சுவாரஸ்யமான பண்டிகையாய் இருப்பதில்லை.

உழவர் திருநாள் : பரிதாபத்திற்குரிய நிலையில் இருக்கும் உழவனுக்குத் திருவிழா?

தமிழர் திருநாள் : தமிழனின் கதியோ தேசத்துக்கு வேறாய் இருக்கிறது.

தமிழ்ப் புத்தாண்டு : இனி வரும் எல்லா ஆண்டுகளிலும் தொடருமா? (ஆட்சி மாறினாலும்?)

செய்தி : ஜல்‌லி‌க்க‌ட்டு போ‌ட்டி‌க்கு தடை ‌வி‌தி‌க்க‌க் கோ‌ரி இ‌ந்‌திய ‌வில‌ங்குக‌ள் நல அமை‌ப்‌பி‌ன் சா‌ர்‌பி‌ல் வழக்கு ஒன்று ...

நிறைய கேள்விகள், குழப்பங்களுக்கிடையே.. விடுமுறை என்பதால் 8 அல்லது 9 மணிக்கு எழுந்து, சம்பிரதாயத்துக்காக புத்தாடை, குக்கர் பொங்கல். மொபைலில் "Happy Pongal" SMS வாழ்த்து, அப்புறம் "இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக...", இடையிடையே சில தொலைபேசி அழைப்புகள்.. முடிந்தால் அருகிலிருக்கும் கோவில்.

நாமதான் இப்படி.. என்று கிராமத்திலிருக்கும் நண்பருக்கு போன் செய்து விசாரித்ததில்,

இன்னிக்கெல்லாம் கூட்டம் அதிகமா இருக்கும்கிறதால, நேத்திக்கே டாஸ்மாக்குல சரக்கு வாங்கியாச்சு, கோழி இன்னும் ரெடியாகல, அதுக்காக தான் வையிட்டிங்..

ரேட்டு கட்டுபடியாகல.. அதுனால தான் "காட்ட" இன்னும் விக்காம இருக்கேன்.


நம்ம ஊர்ல இந்த வருசமாச்சும் எதாவது பங்க்சன் வெக்கலாம்னு பாத்தா..
கோயில் திருவிழாவுக்கே, ரெகார்ட் டான்செல்லாம் போடக் கூடாதுன்னு போலீஸ் சொல்லிருச்சு..
(அப்போ மானாட மயிலாட?)

சேனல மாத்த உடாம இந்த பயபுள்ள ஒரே ஆர்ப்பாட்டம்.. இப்போதான் ஒரு கரும்பு வாங்கிக்குடுத்துட்டு ரிமோட்டப் புடுங்கிக்கிட்டுவந்தேன்.
(உபயம்: தமிழக அரசு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி)


____சேனல்ல நாளைக்கு அலங்காநல்லூர் லைவ் ப்ரோகிராம்?.

சரி மாப்ள ஊருக்கு வர்ற மாதிரி இருந்தா போன் பண்ணு ...


ஒரு எச்சரிக்கை:

கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்கள் நன்றாக இருக்கும் என்று யாரேனும் அழைத்தால்... நம்பிப் போய் ஏமாந்து போகாதீர்கள்!.

அனேகமாக அடுத்த தலைமுறைக்கு, பொங்கல் திருநாள் என்பது, சென்ற நூற்றாண்டில் கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை.
ஜல்லிக்கட்டு, இன்ன பிற எல்லாம், ஒரு கால கட்டத்தில் நடந்த வரலாறுச் சம்பவம் / செய்தியாய் அமையலாம்.

அரசு ஆவணக் காப்பகங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே எல்லோருக்கும்,

 "பொங்கல் நல்வாழ்த்துக்கள்".

பூக்களுக்கும், உனக்கும்..

0

| Posted in , | Posted on 7:36 PM





ரோட்டோரமாய் பல முறை
ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு.

ஆனால்,
எப்போதும் என் வீட்டு செடிகள்
கருத்தரிக்கும் முன்பே
மரித்துவிடும்!

எப்போதும் சண்டையிடும் உன் கோப விழிகள்
எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள் போல,

ஒருநாள் அதிகாலை - அது
அரிதாய் பூப்படைந்தபோது,
அன்று முழுவதும்
பண்டிகை தினமானது எனக்கு.

ஆம்
என் வீட்டு பூக்களுக்கும்,
உனக்கும் சம்பந்தம் இருக்கிறது!


நன்றி : வார்ப்பு

(இது வார்ப்புவில் வெளியான எனது படைப்பு.)

சொடக்கு!

1

| Posted in , | Posted on 7:27 PM


சவாலின் சங்கேத மொழி
சொடக்கு!

அழைப்பின் அதிகார தொனி
சொடக்கு!

தாளத்தின் ரசிப்பும் கூட
சொடக்கு!

ஆனாலும்
சுகம் தான் - உன்னால்

விரல் வருடி எடுக்கப்படும்
சொடக்கு!

நன்றி : வார்ப்பு

(இது வார்ப்புவில் வெளியான எனது படைப்பு.)

முதல் பதிவு

0

| Posted on 8:51 PM

அலைகளினால் அழித்துவிடலாம்
- கடலின் கர்வம்!
சுவடாகவே நிலைத்துவிடலாம் - ஒரு
குழந்தையின் குதூகலம்!

இந்த இணைய மகா சமுத்திரத்தின் ஓரத்தில்,
இதோ இவனது கால்தடம்.